எண்ணெய்ப்பனை தொடர்பான அரசாங்கத்தின் தடுமாற்றம் காரணமாக பெருந்தொட்ட நிறுவனங்கள் ரூ. 500 மில். இழப்பைச் சந்திக்கும்

news

A standard oil palm nursery (on left) and what the nurseries in Sri Lanka look like today.

இலங்கையில் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டு விரிவாக்கப்படும் எண்ணெய்ப்பனை (oil palm) பயிர்ச்செய்கைத் துறைக்கு மத்தியிலும், அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான முன்பின் முரணான நிலை, தடுமாற்றம் ஆகியன காரணமாக, அடுத்த சில மாதங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்கள் மொத்தமாக 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஒட்டுமொத்தமாகச் சந்திக்குமென, துறையின் உச்சநிலைத் தொழிற்றுறைச் சங்கம் எச்சரித்துள்ளது.

எண்ணெய்ப்பனைப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, 356,000 எண்ணெய்ப்பனைகள் இறக்குமதி செய்யப்பட்டன எனத் தெரிவித்த எண்ணெய்ப்பனைத் தொழிற்றுறைச் சங்கம் (The Palm Oil Industry Association - POIA), எனினும் தவறாக வழிநடத்தப்பட்ட செயற்பாட்டாளர்களாலும் தன்னல அக்கறைகொண்ட அதிகாரத் தரகர்களாலும் பரப்பப்படும் பொய்களாலும் தவறான தகவல்களாலும் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்குப் போதுமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காததன் காரணமாக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அந்த எண்ணெய்ப்பனைகள், செடிகொடிகள் வளர்க்கப்படும் பண்ணைகளில் முதிர்ச்சியடைந்து வருகின்றன எனத் தெரிவித்தது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எண்ணெய்ப்பனைத் தொழிற்றுறைச் சங்கத்தின் தலைவர் கலாநிதி றொஹான் பெர்ணான்டோ, 'இம்மரங்களில் கிட்டத்தட்ட 40 சதவீதமானவை, ஏற்கெனவே பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறியிருக்கலாம் என்பதோடு, இவ்விடயத்தில் அரசாங்கம் விரைந்து செயற்பட்டு இதைத் தீர்க்காவிட்டால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அனைத்து மரங்களுமே முற்றாக அழிக்கப்பட வேண்டியேற்படும் என நாம் அஞ்சுகிறோம்' எனத் தெரிவித்தார்.

எண்ணெய்ப்பனைகளைப் பயிரிடுவோர், சுத்திகரிப்போர், பதப்படுத்துவோர், எண்ணெப்ப்பனையினதும் அதனால் உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருட்களினதும் உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துவோர், விற்பனையாளர்கள் ஆகியோரை, எண்ணெய்ப்பனைத் தொழிற்றுறைச் சங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவர்கள் அனைவரும் இணைந்து இத்தொழிற்றுறையில் 26 பில்லியன் ரூபாயை மொத்தமாக முதலிட்டுள்ளனர். இலங்கையில் இப்போது 11,000 ஹெக்டேயர்களுக்குக் குறைவான நிலத்திலேயே எண்ணெய்ப்பனைகள் காணப்படுவதோடு, தேயிலை, இறப்பர், தெங்கு ஆகியவை பயிரிடப்படும் பரப்பளவின் 1 சதவீதமாக இது உள்ளது. கடுமையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின்கீழ், எண்ணெய்ப்பனைகளின் பயிர்ச்செய்கை அளவை 20,000 ஹெக்டேயர்களாக அதிகரிப்பதற்குப் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஆணையளிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு ஊடுருவலை ஏற்படுத்தாத வகையில் இத்தொழிற்றுறையை முன்னெடுக்க மேற்படி ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட இருந்தாலும், அத்திட்டத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கியது.

செடிகொடி வளர்க்கும் பண்ணைகளில் எஞ்சியுள்ள எண்ணெய்ப்பனைகளில் பயிரிடக்கூடியவற்றைப் பயிரிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதற்கான கோரிக்கை விடுக்கப்படும் நிலையில், இதன்மூலமாகப் பெருந்தோட்ட நிறுவனங்கள் சந்தித்துவரும் இழப்புக்களைக் குறைப்பதற்கும், வெளிநாட்டு நாணய மாற்று வீதத்தைப் பாதுகாப்பதற்காக இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பாம் எண்ணெயை (palm oil) உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படுமென, கலாநிதி பெர்ணான்டோ தெரிவித்தார். காணப்படும் அனைத்து மரங்களையும் நாட்டினாலும்கூட, எண்ணெய்ப்பனைகள் நாட்டில் காணப்படும் பரப்பளவு, வெறுமனே சுமார் 2,750 ஹெக்டேயர்களால் மாத்திரமே அதிகரிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'தெங்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்பதை நாம் அறிவோம். அது தொடர்பில் எமக்கு எந்தவிதமான எதிர்ப்புகளும் இல்லை. ஆனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் மூலமாக நாட்டில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்த் தேவையைப் பூர்த்திசெய்வதற்கான நிலைமையொன்றை நாம் அடைவதற்கு, ஆகக்குறைந்தது 20 ஆண்டுகளாவது செல்லுமென நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேபோல், தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு அதிக செலவாகுவதோடு, எண்ணெய்ப்பனையை விட அதிக நிலம் தேவைப்படுகிறது என்ற கருத்தும் உள்ளது' என்று குறிப்பிட்டார்.

உள்நாட்டு பாம் எண்ணெய் உற்பத்தித் தொழிற்றுறை மீது முன்வைக்கப்படும் அடிப்படிடையற்ற பழித்தூற்றல்கள் காரணமாக, ஆண்டுக்கு வெறுமனே 23,000 தொன் பாம் எண்ணெயை மாத்திரமே நாடு உற்பத்தி செய்ததோடு, ஒவ்வோர் ஆண்டும் மிகப்பெரிய எண்ணிக்கையான 220,000 தொன் கச்சா பாம் எண்ணெயை நாடு இறக்குமதி செய்வதோடு, இதற்கு 22 பில்லியன் ரூபாய் செலவாகிறது.

நாட்டில் பாம் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் எண்ணெய்ப்பனை பயிரிடப்படும் அளவை 20,000 ஹெக்டேயராக அதிகரிப்பதற்கும் அரசாங்கம் எடுத்த முடிவு, பூரணமான நிபந்தனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் அமைய எடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, எந்தவிதமான சுற்றுச்சூழல் பாதிப்புகளும் காடழிப்பும் சாத்தியமான பயிர்கள் அகற்றப்படுவதும் நடைபெறாது என, கலாநிதி பெர்ணான்டோ குறிப்பிட்டார். எனினும், மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தாறுமாறாகவும் ஒழுங்குபடுத்தல்கள் இன்றியும் பேராசையுடனும் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட எண்ணெய்ப்பனைப் பயிரிடலைப் பயன்படுத்திய அதிகாரத் தரகர்கள், 50 ஆண்டுகளில் 11,000 ஹெக்டேயர்களுக்கும் குறைவான அளவிலேயே எண்ணெய்ப்பனையை இலங்கை பயிரிட்டுள்ளது என்பதைக் கருத்திலெடுக்காமல், எண்ணெய்ப்பனைத் தொழிற்றுறை தொடர்பில் அடிப்படையற்ற பய உளவியலை ஏற்படுத்தியிருந்தனர்.